சென்னை: அம்பத்தூர் ஆதித்யா பிளாசா பகுதியைச் சேர்ந்தவர் சோபா (41). இவரது மகன் பிரவீன் (18), நெற்குன்றத்தில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து கொண்டே, பகுதி நேரமாக ஆவடியில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை செய்து வந்தார்.
பிரவீன் நேற்று (பிப்.11) மதியம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் வழியாக ஆவடி மார்க்கெட்டிலிருந்து ஆவடி பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு மாநகர பேருந்து, இருசக்கர வாகனத்தின் கைப்பிடியில் உரசியது.
இதில் நிலை தடுமாறிய பிரவீன், வலது புறமாகவிழுந்தபோது, பின்னால் வந்த தண்ணீர் ஏற்றி கொண்டு வந்த டிராக்டர் பிரவீன் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், பிரவீனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் குமார் (40) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரமப்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்ணீர் டிராக்டர் ஓட்டுநர் செல்வம் (45) ஆகிய இருவரையும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் கடன் தேடுபர்களே குறி! பெண்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது!