சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரியின் பேராசிரியராக இருந்து வருபவர் பெஞ்சமின் பிராங்கிளின். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் கல்லூரியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒய்.எம்.சி.ஏ இந்தியாவின் தேசிய சபை நிர்வாகத்தின் சார்பாக லிபி ஃபிலிப் மேத்தியூ என்பவர் தலைவராகவும், கோசி மேத்தியூ என்பவர் கரஸ்பாண்டண்ட் செயலாளராகவும் மற்றும் பால்சன் தாமஸ் என்பவர் திட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நிர்வாகிகளான அவர்கள் மூவரும் அப்போதைய காலகட்டத்தில் கல்லூரியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து, கல்விக் கட்டணமாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் வரை தன்னிச்சையாக வசூல் செய்து, அந்த பணத்தை கல்லூரியின் வங்கி கணக்கில் செலுத்தாமல், முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இது தொடர்பாக தற்போதைய செயலாளரும் பேராசிரியருமான பெஞ்சமின் பிராங்கிளின் சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களின் பணத்தை கையாடல் செய்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவானவர்களில் பால்சன் தாமஸ் என்பவர் கேரள மாநிலம் கட்டக்கோடு கிராமப் பகுதியில் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கேரள மாநிலம் சென்ற தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்டு அங்கு பதுங்கி இருந்த பால்சன் தாமஸ் என்பவரை கைது செய்து அவரை சென்னை அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் கைது!