சென்னை: போலியோ தடுப்பு மருந்து மற்றும் போலியோ ஒழிப்பிற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
போலியோ என்றால் என்ன?
போலியோ என்பது ஒரு வகையான தொற்று மற்றும் ஆபத்தான வைரஸாகும். இது மனிதர்களின் உடலில் நிரந்தர பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு போலியோ நோய் தொற்று ஏற்பட்டால் அவற்றிற்கான சிகிச்சைகள் இல்லை. போலியோ நோய் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளை முதன்மையாக பாதிக்கும் நோயாகும்.
இவை உடல் உறுப்புகளில் நிரந்தர முடக்கம் அல்லது சில உறுப்புகளின் அசையாத தன்மையை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் போலியோ வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் சுவாச தசைகளைத் தாக்கி அசையாத தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் நோயாளிகள் தொற்று காரணமாக இறக்கவும் நேரிடும்.
உலக போலியோ தின வரலாறு
செயலற்ற (கொல்லப்பட்ட) போலியோ தடுப்பு மருந்தை (ஐபிவி) உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய, டாக்டர் ஜோனாஸ் சால்க்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் உலக போலியோ தினம் கொண்டாடப்படுகிறது. இது முதலில் 1955 இல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆல்பர்ட் சபின் வாய்வழி போலியோ தடுப்பு மருந்தை 1962ல் உருவாக்கினார். ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் WHO இணைந்து 1988ல் உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியை (GPEI- Global Polio Eradication Initiative) நிறுவியது. இந்தியா 2014 இல் உலக சுகாதார அமைப்பின் (WHO) போலியோ இல்லாத சான்றிதழைப் பெற்றுள்ளது.
உலக போலியோ தினத்தின் முக்கியத்துவம்
போலியோ இல்லாத தேசத்தை உருவாக்கவும், குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாளில் நிதி திரட்டுகின்றன. இந்நாளில் போலியோ நோய், போலியோ நோய் தடுப்பு நடவடிக்கைகள், போலியோ நோயின் அறிகுறிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. போலியோ வைரஸ் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு நாடுகளில் போலியோ நோயால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
உலக போலியோ தினத்தின் குறிக்கோள்: “போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்க மக்களின் கவனத்தை ஈர்ப்பது”.
உலக போலியோ தினத்தின் கருப்பொருள்: ”தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்”. குழந்தைகளுக்கும் , தாய்மார்களுக்கும் போலியோவை ஒழித்து ஆரோக்கியமான எதிகாலத்தை வழங்குவது குறித்து இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.
போலியோ தடுப்பூசி வகைகள்:
- நோயாளியின் வயதைப் பொறுத்து, கால் அல்லது கையில் செலுத்தப்படும் போலியோ வைரஸ் தடுப்பூசி (IPV),
- வாய்வழி போலியோ வைரஸ் தடுப்பூசி (OPV).
குழந்தைகளுக்கு வாய்வழியாக வழங்கப்படுகிறது . அதனைத்தொடர்ந்து, முதல் மூன்று டோஸ்கள் 6, 10 மற்றும் 14 வாரங்களிலும், ஒரு பூஸ்டர் டோஸ் 16-24 மாத வயதிலும் கொடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீரிழிவு நோயால் வாய்க்கு இவ்ளோ ஆபத்தா.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!