சென்னை அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (55). இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தம்பியின் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சாவித்திரி அவசர தேவைக்காக கடந்த செப்.28 ஆம் தேதி இரவு 7 சவரன் நகையை விற்பதற்காக புரசைவாக்கத்திலுள்ள தனது அக்கா ராஜேஸ்வரி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து, ராஜேஸ்வரியின் மகள் பிரியா (41) என்பவர் நகையை விற்று 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை சாவித்திரியிடம் கொடுத்துள்ளார். பின்னர், சாவித்திரி அவரது அக்காவின் வீட்டிலேயே அன்றிரவு தங்கியுள்ளார்.
பின்னர், செப்.29ஆம் தேதி பிரியா தனது இருசக்கர வாகனத்தில் சாவித்திரியை அயனாவரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பிராட்வே பேருந்து நிலையத்தில் விட்டுள்ளார்.
பின்னர், பேருந்தின் மூலம் வீடு திரும்பிய சாவித்திரி, தன் கையில் வைத்திருந்த பையில் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பார்த்தபோது காணாமல் போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, அவரது உறவினர்களிடம் விசாரித்தும் பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று (அக்.08) சாவித்திரி, அயனாவரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
மேலும், தனது அக்கா மகள் பிரியா மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சாவித்திரி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் நூதன முறையில் உயர் ரக கேமரா திருட்டு!