சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பவானி நகரைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மனைவி காவேரி. இவர்களது மகன் சூரியபிரகாஷ் (9). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
சூரியபிரகாஷ், தினமும் பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த நவம்பர் 26ஆம் தேதி காலை ராஜவேலு, தனது மகனை பள்ளிக்கு அனுப்ப வேனுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் காவேரி மற்றும் ராஜவேலுவின் அம்மா பத்மாவதி (63) ஆகியோரும் அங்கு வந்தனர்.
அப்போது, அவ்வழியாக மின்சாரம் செல்லும் கம்பி திடீரென அறுந்து காவேரி மேல் விழுந்தது. இதில், உடல் கருகி காவேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூரிய பிரகாஷ், பத்மாவதி ஆகியோர் படுகாயமடைந்து அலறினர். ராஜவேலு, நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். மின்வாரிய அலுவலர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், மின் கம்பி அறுந்து பெண் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் ஆகியோர் நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இரண்டு அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு - குற்றவாளிகளுக்கு காவல் துறை வலை!