அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 92 பொறியியல் கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாததால் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்தக் கல்லூரிகளின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்தி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவிற்கு அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ள பதிலில், "அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக அங்கீகாரம்பெற்ற சில பொறியியல் கல்லூரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே அந்தப் பட்டியலை வெளியிடுவதற்கு தற்பொழுது சரியான நேரமாக இருக்காது.
2019-20ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் எந்தப் பிரிவில் எத்தனை மாணவர்களை சேர்க்கப்படலாம் என்ற விவரத்தினை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
2019-20 ஆம் கல்வியாண்டில் 192 குழுக்கள் அமைக்கப்பட்டு அங்கீகாரம் அளிப்பதற்கான விதிமுறைகளின்படி ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வுக்குழுவிற்கு பணியாளர்கள் தனியாக தேர்வு செய்யப்படமாட்டார்கள். அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்கனவே பல்வேறுத் துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பார்கள்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களை பதிவாளர், துணைவேந்தர் ஆகியோர் நியமித்தனர். அங்கீகாரம் அளிப்பதற்கான குழுவில் ஐஐடியில் 112 பேரும், என்.ஐ.டி.யில் 124 பேரும், ஐ.ஐ.எஸ்.சி.யில் 88 பேராசிரியர்-உதவி பேராசிரியர்களும் 2019-20ஆம் கல்வியாண்டிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஐஐடியில் 49 பேரும், ஐ.ஐ.எஸ்.சி.யில் 19 பேரும், என்.ஐ.டி.யில் இருந்து 69 பேரும் அங்கீகாரத்திற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் நேரடியாக அந்த நிறுவனத்தின் அனுமதியினை பெற்றாலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெறவில்லை" என கூறப்பட்டுள்ளது.