கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் கோவிட்-19 வைரஸ் பிடியிலிருந்து சென்னை மீண்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டாலும் குணமடைந்தவரின் விழுக்காடு அதற்கு ஈடாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்களிடையே சற்று பதற்றம் குறைந்துள்ளது. கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதனால், சென்னையில் பல மாதங்களாகப் பணிக்குச் செல்லாதவர்களும், தற்போது பணிக்குச் செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் சென்னையில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே, சாலைகள் சேதம் அடைந்திருப்பதால் மழைநீர் சாலையிலேயே தேங்கும் அவலம் தொடர் கதையாகி வருகிறது.
இதில் பெருங்குடி மண்டலம் பாலவாக்கம் பெரியார் வீதியும், மணியம்மை வீதியும் மிக முக்கியமான பகுதியாகும். இந்தப் பகுதி ஈசிஆர், ஓஎம்ஆர் ஆகிய சாலைகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. ஈசிஆர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சுற்றிச் செல்வதற்குப் பதிலாக பாலவாக்கம், பக்கிங்காம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் சாலைக்குச் செல்கின்றன.
இந்தப் பகுதியில் ஐடி மற்றும் பலதரப்பட்ட தனியார் நிறுவனங்கள் இருப்பதால், எப்போதும் இந்தப் பகுதியில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
இப்படி, தரமற்ற சாலைகளில் ஏற்படும் பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அடிக்கடி பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதியிலிருக்கும் விவேக்கிடம் பேசினோம். அவர் கூறுகையில், 'பணிக்குச் செல்ல இந்த சாலையைத்தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறேன். சாதாரணமாகவே இந்தச் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. மழைக் காலங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மிகக் கடினமாக உள்ளது. இரவு நேரங்களிலும் நடந்து செல்வதற்குக்கூட பயம்தான். பல நபர்கள் இவ்வழியேச் செல்லும் பொழுது கீழே விழுந்துள்ளனர். இந்த வழியே இல்லாமல் சுற்றிச் செல்லலாம் என நினைத்தாலும் அங்கும் இதே நிலைதான்'என்கிறார்.
இது குறித்துப் பல முறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பெரியார் வீதி வழியாக சென்று வருவதால் வாகனங்கள் சேதமடைகிறது.
அப்பகுதி மக்கள் சிலர் சேதமடைந்த சாலைகளில் கட்டடம் கட்டுவதற்கு வைத்திருக்கும் செங்கல்களையும், கற்களையும் இட்டு அப்பள்ளத்தை மூடி வருகின்றனர். இதன் மீது வாகனங்கள் ஏறி செல்லும்போது வாகனங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.
கரோனா நடவடிக்கைக்கு நடுவில் அரசு இயந்திரங்கள் பிற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ என்றுதான் தோன்றுகிறது. பெரிய வாகனங்களும், அதிகமான போக்குவரத்தும் உள்ள சாலைகள் எப்படி தரமாக இருக்க வேண்டுமோ? அந்த தரம் சென்னைப் பகுதியில் இருக்கும் சாலைகளில் இருப்பதில்லை.
'நான் இந்தப் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மழைக்காலங்களில் பல நபர்கள் இங்கு கீழே விழும் நிலையில் தான் சாலை இருக்கிறது. அதுமட்டுமின்றி, மழை அதிகமாக இருக்கும்பட்சத்தில் கழிவு நீரும் அந்தப் பள்ளத்தில் தேங்கி விடுகிறது' என்றார், நந்தகுமார்.
பாலவாக்கம் பெரியார் வீதி என்றால் மிகவும் பரபரப்பாக இயங்கும் வீதி. ஆனால், கனரக வாகனங்கள் செல்லும்போது சாலைகள் சேதமடைவது வாடிக்கையாகி வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி பாலவாக்கம் உதவிப் பொறியாளரிடம் கேட்டபோது, 'பெரியார் சாலை, வீரமணி சாலை, மணியம்மை சாலை போன்று அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் புதிய சாலை அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு பட்டியலிட்டு ஒப்புதல் வாங்கிவிட்டோம். புதிய சாலை அமைக்கும் பணியை சென்றவாரம் மாநகராட்சி சார்பில் தொடங்கினோம்.
ஆனால், மெட்ரோ நீர் சேவைக்காக குழாய் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. எங்களுக்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என ஒரு கடிதம் அனுப்பினார்கள். இதனால் சாலை அமைக்கும் பணி சற்று தாமதமாக உள்ளது. மெட்ரோ நீர் குழாய் அமைக்கும் பணி முடிந்தவுடன் சாலை அமைத்து விடுவோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆறு மாதத்தில் எத்தனை முறை சாலைகள் அமைக்கப்பட்டது? உயர்நீதிமன்றம் கேள்வி