சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த நந்தினி என்ற பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்று வருகிறார். இவர் தன் கணவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் "மோனேஷ் பாபு என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவரும் மதுரை திருமங்கலத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
சிறிது நாட்களிலேயே மோனேஷ் பாபு நந்தினியிடம் உள்ள 52 சவரன் நகை, பணத்தை பறித்துக் கொண்டு தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக மதுரை திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நந்தினி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்த காவல் துறையினர் மோனேஷ் பாபு குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குகளை மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில், மதுரை மாவட்ட புறநகர் செயலாளராக இருப்பதாக கூறி, செல்வாக்கை பயன்படுத்தி உடனடியாக வழக்கிலிருந்து மோனேஷ் பாபு வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திரைப்பட இயக்குனர் என கூறி மோனேஷ் பாபு பல பெண்களிடம் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியும், பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி பாலியல் உறவு கொண்டார் " என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பல பெண்களை மோனேஷ் பாபு ஏமாற்றியுள்ளார். காஸ்டிங் ஏஜென்சி வைத்துள்ளதாகவும் அதன் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களையும் ஏமாற்றியுள்ளார்” என தெரிவித்தார்.
மேலும் "எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எங்கேயும் வெளியே அழைத்து சென்றது கிடையாது. குறிப்பாக இவருடைய லேப்டாப் மற்றும் மொபைல் போனில் பார்த்த பிறகு தான் தெரிந்தது இவருடைய உண்மையான சுய ரூபம். நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பெண்கள் இவரிடம் சிக்கி இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றார். குறிப்பாக தாய், தந்தை இல்லாத பெண்களை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாகவும், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதற்கு பிறகு தான் தனக்கும் மோனேஷ் பாபுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் மோனேஷ் பாபு கொடூரமாக தாக்க ஆரம்பித்தார் எனவும் கூறினார். அதனுடைய சிசிடிவி காட்சிகளை காவல்துறை தலைவருக்கு அனுப்பி உள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். என்னை திருமணம் செய்து கொண்ட பிறகு மற்றொரு பெண்ணிடமும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குமூலம் கொடுத்த ஆடியோ பதிவும் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆகவே மோனேஷ் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டால், பல பெண்கள் இவர் மீது புகார் கொடுப்பார்கள் மேலும் மற்ற பெண்கள் இவரிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது