இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளன தமிழ்நாடு மாநில செயலாளர் மஞ்சுளா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக ஊடகங்களில் கிஷோர் கே சாமி என்பவர் சில ஆண்டுகளாகவே பொதுவெளியில் இயங்கும் பெண்கள் குறித்து ஆபாசமாக, அருவருப்பாக பதிவு செய்து வருகிறார். 2013ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக பெண்களை இழிவுபடுத்தி அவர் எழுதிய பதிவுகள் மீது இதுவரை எந்த பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெண் பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் அவதூறாக கொச்சையாக எழுதும் கிஷோர் கே சாமிக்கு எதிராக கிட்டத்தட்ட 10 புகார்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தரப்பட்டிருக்கின்றன. அதில் இரு புகார்கள் மீது மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தப் புகார் காரணமாக கைது செய்யப்பட்ட அவர் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்படுள்ளார்.
இந்த நடவடிக்கை கண்துடைப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு நெருக்கமாக இருப்பதாலே இத்தனைப் புகார்களுக்கு இடையிலும் கிஷோர் பாதுகாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜுலை 29ஆம் தேதி கிஷோர் மீதான கைது நடவடிக்கைக்குப் பிறகு பாஜக தலைவர் எச். ராஜா அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததும் அதை உறுதி செய்கிறது.
சமீபத்தில் ஏபிவிபியின் தேசிய தலைவர் பொறுப்பிலிருக்கும் சுப்பையா என்பவரும், அவரது வீட்டருகில் வசிக்கும் முதியப் பெண்ணின் வீடு முன்பாக சீறுநீர் கழிப்பது, தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற தொல்லைகள் தந்தார். அவர் மீது புகார் அளிக்கப்பட்ட போதும் பாஜக தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி எடுத்தார்கள்.
பெண் பாதுகாப்பு, பெண் நலம் என்று பேசும் இக்கட்சிகள் தொடர்ச்சியாக பெண்களை தரக்குறைவாக அவதூறாக பேசும் நபருக்கு பாதுகாப்பு அளித்து வெளிப்படையாக ஆதரிப்பது ஏன்? பெண்களை பற்றி தொடர்ந்து அவதூறு பேசி அதற்காக சட்ட நடவடிக்கையை சந்தித்துக் கொண்டிருக்கும் கிஷோர் போன்ற நபர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாஜக, அதிமுக கட்சிகள் சொல்லும் செய்தி என்ன?
சமூகத்தில் பெண் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை சட்டரீதியாக செயல்படாமல் ஏன் அழுத்தத்திற்கு அடி பணிகிறது? பெண்களுக்கு எதிரான சிந்தனைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளாக இன்று பொதுவெளியில் அடையாளம் காணப்பட்டிருக்கும் பாஜக மற்றும் அதிமுகவில் உள்ள பெண் தலைவர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகளை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் முன்வைக்கிறது.
எனவே கிஷோர் சாமி போன்ற ஒரு கீழ்த் தரமான நபர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் எல்லா புகார்களையும் உடனடியாக காவல்துறை கவனத்தில் எடுத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பெண்களை கொச்சைபடுத்தும் பதிவுகள், பிரச்சாரங்களை காக்க முற்படுவது சமூகவெளியில் பெண்கள் வெளியே வருவதற்கு உள்ள வாய்ப்பை உரிமையை மறுக்கும் செயலாகும்.
அதுபோன்ற நபர்களை பாதுகாக்கும் பாஜகவிற்கு கடும் கண்டங்களை தெரிவிப்பதோடு இது போன்ற குற்றச் செயல்கள் புரிபவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதையும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்