சென்னை: விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், "குடியரசுத் தலைவருக்கு 2022 பிப்ரவரி 3ஆம் தேதி அனுப்பிய மனுவில், நீட் தேர்வு ரத்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவிற்குத் தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். எனவே, அவரை மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினேன்.
மேலும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை மாநிலங்களின் அனுமதியின்றி, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஏழை அரசுப்பள்ளி மாணவர்களின் கனவு பறிபோகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு என்பது சாத்தியமானதே.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்த சட்ட மசோதாவின்படி தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கப் பெற்றிருக்கும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைத் திரும்ப அனுப்பிய ஆளுநரை மாற்ற வேண்டும். தமிழ்நாடு ஆளுநரை மாற்றம் செய்யாவிட்டால் ஆண்டு தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்" எனவும் அதில் கூறியிருந்தார்.
இதனையடுத்து, அந்த மனுவை மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு மையம் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒப்புதல் எண்ணை PRSEC/E/2022/03308 வழங்கி உள்ளது. மேலும், அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குப் பரிந்துரை வழங்கி உள்ளது.
இதனிடையே இந்தப் பரிந்துரைக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ராமபிரதீபன் இன்று (மார்ச் 29 ஆம் தேதி) அளித்துள்ள பதிலில், மனுதாரரின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதாகும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக நல ஆர்வலர் சரவணன் கூறும்போது, 'தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதற்காகத் தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை மனு அனுப்பி இருந்தேன். அதன்மீது தீர்வுகாணும் அதிகாரம் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகை, அதனை தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி இருக்கிறது.
இதனையும் சரியாகப் பார்க்காமல், ஆளுநரை மாற்றும் அதிகாரம் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதில் அளித்துள்ளனர். ஆளுநரை மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது என்பது கூட தெரியாமல் பதில் அளித்துள்ளனர்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் நினைவு தினம்