தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டம் உள்பட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது, அனைத்து பெண்களும் தமிழ்நாடு அரசின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்புதான். எவ்வித அடையாளம் அட்டையும் இன்றி பேருந்துகளில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி பேருந்துகளில் மணிக்கணக்கில் பயணித்து வேலைக்கு சென்றுவந்த பெண்களுக்க வரபிரசாதமாக அமைந்துள்ளது.
பெண்களின் முன்னேற்றத்துக்கும், நிதி சுதந்திரத்துக்கும் இது வழிவகுக்கும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நம்மிடம் பேசிய பயணி தமிழ்ச்செல்வி, "பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களும், கிராமப்புறப் பெண்களுக்கும் இது மிகப்பெரிய அளவில் உதவும். நான் உணவகம் ஒன்றில் பணியாற்றிவருகிறேன். கரோனா தொற்றால் உணவகங்களுக்கு கட்டுப்பாடு உள்ளதால் முறையான வகையில் ஊதியம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பணத்திலும் குறிப்பிடத்தக்க தொகையை பேருந்து பயணத்துக்கு செலவிட வேண்டியிருந்தது. இந்த அறிவிப்பு ஏழை எளியவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்" என புன்னகையுடன் தெரிவித்தார்.
![white board](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11693680_spl.jpg)
அதே சமயம், பெண்களுக்கு அறிவித்துள்ள இலவச சலுகை போலவே திருநங்கைகளுக்கும், மாற்றத் திறனாளிகளுக்கும் அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன்வைக்க தொடங்கினர்
ட்விட்டரில் திருநங்கைகள் இலவசமாக பயணிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்திய செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது பற்றி பரிசீலித்து உடனடியாக முடிவெடுப்பதாக தெரிவித்தார். சமூக வலைதளத்தில் மக்களின் கோரிக்கையை படித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய முதலமைச்சரின் பண்பு பலரை கவர்ந்துள்ளது.
அதே போல், முதலமைச்சரின் அறிவிப்பில் இருக்கும் சாதாரண பேருந்துகளில் மட்டுமே இலவசமாக பயணிக்கலாம் என்பதை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை ஏழுந்துள்ளது. ஏனென்றால், மிக குறைவான அளவிலேயே சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகள் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படுகின்றன. வெள்ளை போர்டில் மட்டும்தான் பயணிக்க வேண்டும் என பயணி முடிவு செய்துவிட்டால், குறைந்தபட்சம் 30 நிமிடமாது காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இது, பணிக்கு செல்லும் பெண்களுக்கு பிரச்னையாக அமைந்திடும்.
![white board](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-women-free-ride-demands-special-story-7208446_08052021211442_0805f_1620488682_618.jpeg)
எனவே, கூடுதலாக வெள்ளை போர்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அனைத்து போர்ட் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக அலுவலர் ஒருவர், "சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 40 முதல் 50 விழுக்காடுவரை வெள்ளை போர்டு பேருந்துகள் உள்ளது. தற்போது தோராயமாக ஆயிரம் வெள்ளை போர்டு பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. நேரம் மற்றும் கூட்ட நெரிசலைப் பொறுத்து தேவைக்கு ஏற்ப அவை இயக்கப்படும் எனக் கூறினார்.
மகளிரின் கோரிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், " தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,460 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா தொற்று பதிப்பு குறைந்தவுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து முடிவு எடுப்பார்.
பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு 1,200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக வழங்கும் எனத் தெரிவித்தார்.
![white board](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11693680_spllllmeme.jpg)
மேலும், பெண்களுக்கு மட்டும் இலவசமா அப்போ எங்களுக்கு இல்லையா என குமுறும் ஆண்கள், பெண்களை போல் வேடமிட்டு பேருந்தில் பயணிப்பது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.