ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆர்.எம்.சுவாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஊரடங்கு முடிந்தபின்பு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றப்படுவது குறித்தும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் குறப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பேருந்தில் ஓட்டுனர், நடத்துனர், பயணிகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு ஏற்கனவே பொதுப்போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும், ஊரடங்கிற்குப் பிறகு, பேருந்து பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வைத்துள்ளது என்பது குறித்து போக்குவரத்து துறைச் செயலர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,000 வழங்கிய பிச்சைக்காரர்!