சென்னை: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒயிட் ஹவுஸ் என்ற பெயரில் விடுதி இயங்கி வருகிறது. நேற்று காலை விடுதியின் உதவியாளர் சிவா முதல் தளத்தில் உள்ள அறைக்கு சுத்தம் செய்ய சென்ற போது துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து உதவியாளர் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறையின் கதவை தட்டிய போது திறக்காததால், கதவை உடைத்து உள்ளே பார்த்த போது இளம்பெண் அழுகிய நிலையிலும், வாலிபர் இறந்த நிலையிலும் கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர்கள் காதலர்களான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரசன்ஜித் கோஷ்(23) மற்றும் அர்பிதா பால்(20) என்பது தெரியவந்தது. காதல் ஜோடியான இவர்கள் கடந்த 3ஆம் தேதி சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணியில் லாட்ஜ் எடுத்து தங்கியது தெரியவந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக இருவரும் லாட்ஜை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும், இளம்பெண் அர்பிதா 2 நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலி இறந்த பின்பு இரண்டு நாட்கள் காதலன் பிணத்துடனே இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பெண்ணின் முகத்தில் தலையணை இருப்பதால் கொலை செய்துவிட்டு காதலன் இறந்துள்ளாரா எனவும் சொந்த ஊரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை வந்து தற்கொலை செய்து கொண்டனரா என்ற பல கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை