சென்னை: இந்தியாவில் தற்போது தங்கத்தின் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலையானது, சவரனுக்கு ரூ.888 வரை குறைந்துள்ளது. தங்கம் வாங்கும் மற்றும் தங்கம் முதலீடு செய்பவர்கள் என்னதான் தங்கத்தின் மீது தனி கவனம் செலுத்தி வந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலையானது மிகக் குறைந்த அளவில் தான் குறைந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில், கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று தங்கம் தன் சரிவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இதனால், செப்.25 ஆம் தேதி - சவரனுக்கு ரூ.8, செப்.26 ஆம் தேதி - ரூ.120ம், செப்.27 ஆம் தேதி - ரூ.200ம் மற்றும் செப்.28 ஆம் தேதியான இன்று ரூ.560 என கடந்த 4 நாட்களில் மட்டும் தொடர்ந்து, தங்கம் சவரனுக்கு ரூ.888 குறைந்துள்ளது. இது பெரிய அளவில் இருந்தாலும் கூட, சர்வதேச சூழ்நிலையில் இது குறைவாக தான் பார்க்கப்படுகிறது.
இது குறித்து, சென்னை தங்க, வைர வியாபரிகள் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், "தங்கம் விலை என்பது, சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைபாடு, முதலீட்டுளார்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் என உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கம் விலை என்பது, தினமும் ஏற்றம் இறக்கம் கொண்டு தான் இருக்கும். கடந்த ஏப்ரல், மே மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து, தங்கத்தின் விலை மெல்ல மெல்ல நிலையானதாக வந்தது. இந்த செப்டமபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது ஏற்றம் இறக்கமோடு தான் இருந்து வருகிறது.
மேலும் தங்கத்தின் விலையானது தேவை மற்றும் அளிப்பு (Demand and Supply) வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு டாலரின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் தங்கத்துக்கு பதில் டாலரில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தங்கம் விலையில் தற்போது, குறைந்து வந்தாலும் இனி வரும் காலங்களில் தங்கம் ஏற்ற இறக்கம் இருக்கும். மேலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையில், அவுன்ஸூக்கு $1,874.57 என இருக்கிறது. எப்போதும் தங்கத்தின் தேவை அதிகரிப்பதால் இந்த விலை மாறுகிறது. ஆனால், தற்போது அனைவரும் டாலரில் இருப்பதால், தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது" என தெரிவித்தார்.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறியதாவது,"இந்தியாவில் ஒப்பிட்டு பார்த்தால், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி கனிசமான அளவில் குறைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆகையால் தங்கம் தினமும், ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. தற்போதைய சந்தை சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு சீராக இருந்திருந்தால், தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,000 வரை குறைந்திருக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இன்றைய தங்கத்தின் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.28) கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5 ஆயிரத்து 410க்கு விற்பனை. அதாவது சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43 ஆயிரத்து 280க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல, 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47 ஆயிரத்து 40க்கும், வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோவிற்கு ரூ.500 குறைந்து, ரூ.76 ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரம் - (செப் 28)
- 1கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,410
- 1சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.43,280
- 1கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,880
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.47,040
- 1கிராம் வெள்ளி - ரூ.76.50
- 1-கிலோ வெள்ளி - ரூ.76,500