சென்னை பனையூரில் கடந்த 20ஆம் தேதி நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது நடிகர் விஜய் நிர்வாகிகளைச் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், அந்த சமயத்தில் நடிகர் விஜய் காரில் வந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஒருவர் மேற்கொள்காட்டி, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, நடிகர் விஜய் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதாகவும், விஐபிக்கள் மட்டும் கருப்பு ஸ்டிக்கரை ஒட்ட மோட்டார் வாகனச்சட்டம் அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக நடிகர் விஜயின் கார் மீது மோட்டார் வாகனச்சட்டத்தின்கீழ் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராத ரசீதை போக்குவரத்து காவல் துறையினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஏற்கெனவே கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். சமீபத்தில் ஒரு வழிப்பாதையில் வாகனத்தை ஓட்டியதாக ஏடிஜிபி ஒருவரின் காரை படம் எடுத்து, ஒருவர் சமூக வலைதளங்களில் பரப்பியதால், ஏடிஜிபி வாகனம் மீது 500 ரூபாய் அபராதத்தை போக்குவரத்து காவல் துறையினர் விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மீண்டும் இளைஞரணிச்செயலர் பதவி - மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்" - உதயநிதி