சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அஇஅதிமுக) அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகக் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அறிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கே.அண்ணாமலை அதிமுகவினர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களான சி.என்.அண்ணாதுரை, ஜெ.ஜெயலலிதா ஆகியோரை விமர்சனம் செய்து வருவதே கூட்டணி பிளவுக்குக் காரணம் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி பிளவானது ஒரு அரசியல் நாடகம் அதனை மக்கள் நம்பமாட்டார்கள் என்று கூறி வரும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை விமர்சனம் செய்ய அஞ்சுகிறார். திரை மறைவில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உண்மையிலேயே முறிந்துவிட்டதா, இதனால் கூட்டணி கணக்குகளில் மாற்றம் ஏற்படுமா? என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை மின்னஞ்சல் வாயிலாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்குப் பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமீபத்தில் மற்ற மாநிலங்களில், பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணியை ஒரு கட்சி முறித்துக் கொண்ட பிறகு நடந்த நிகழ்வுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி முறிவு காட்சியையும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களுக்கே கூட்டணி முறிந்து விட்டதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அக்கூட்டணி முறிந்தாலும் - முறியா விட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை!
ஒன்றியத்தில் 9 ஆண்டுக்காலம் பா.ஜ.க. ஆட்சியின் அலங்கோலங்களையும் - தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். இப்போது நல்லாட்சி தரும் தி.மு.க.வை நல்ல பல மக்கள் திட்டங்களைத் தந்துள்ள இந்த ஆட்சியை, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் சாதனைகளைப் படைக்கும் தி.மு.க. ஆட்சியைத் தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து களத்திற்குச் செல்கிறோம்.
10 ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை இரண்டரை ஆண்டுகளில் மாற்றி, நிர்வாக எஞ்சினை நேர்த்தியாகச் செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே தி.மு.க.வின் நல்லாட்சி, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் நல்லெண்ணம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள்!" இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரத்யேக பேட்டி