சென்னை: இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் இன்று நடக்கவுள்ளதால், தமிழகத்தில் உள்ள பல கோயில்களின் நடை இன்று சாத்தப்படுவதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
கிரகணம் எப்படி நிகழ்கிறது?: முழு நிலவு நாளில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, அதாவது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு நிலவின் மேல் பூமியில் நிழல் படும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
அதைப்போல சந்திரனின் ஒரு பகுதியில் மேல் பூமியில் நிழல் விழிந்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். அப்படியெனில், ஓவ்வொரு மாதமும் சந்திரகிரகணம் ஏன் ஏற்படுவது இல்லை என கேள்வி எழலாம். அதாவது, நிலவு பூமியை சுற்றி வந்தாலும், எப்போதும் அது பூமியின் நிழலுக்குக் கீழ் வருவது கிடையாது.
பூமியைச் சுற்றிய நிலவின் வட்டப்பாதை சற்று சாய்வானது. அதனால் நிலவு பூமிக்குப் பின் இருந்தாலும், அதன் மீது நிழல் படாமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஆண்டில் ஏதேனும் 2 முறை மட்டுமே இரண்டும் நேர்க்கோட்டிற்கு வரும். இதனால்தான் சந்திர கிரகணம் அரிதாகவே நடக்கிறது.
நம்பிக்கைகள்: விஞ்ஞானிகள் இது ஒரு சாதாரண வானியல் நிகழ்வு என்று கருதுவார்கள். ஆனால் அதேநேரத்தில், ஆன்மிகவாதிகள் இதை ஜோதிடம் மற்றும் மதத்துடன் சம்பந்தப்படுத்துவார்கள். பல நூற்றாண்டுக்கு முன்னர் கிரகணம் ஏற்பட்டபோது அனைத்து புனித ஸ்தலங்களும் மூடப்பட்டன. அப்போது யாத்திரிகர்கள் தெருவுக்கு தெரு சென்று சத்தமாக கூச்சலிட்டு பிச்சை கேட்பதை வழக்கமாக செய்துள்ளனர்.
ராகு மற்றும் கேது என்பது நிழலின் கிரகங்கள் ஆகும். இந்த ராகு, சூரியனையோ அல்லது சந்திரனையோ விழுங்க நினைக்கும் தருணம்தான் கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கோயில்கள் மூடப்படுவதற்கான காரணம் என்ன? பெளர்ணமி அன்று நடக்கவிருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படும் என்பதால், இந்தியாவுக்கு கிரகண தோஷம் ஏற்படும் என கருதப்படுகிறது. இதனால் கிரகண நேரத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்படும்.
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்தியாவில் சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 01.06 முதல் 02.22 வரை இருக்கும். மேலும், நடக்கவிருக்கும் சந்திரகிரகணம் 1 மணி 19 நிமிடங்கள் நிகழும் என கணக்கிடப்பட்டுள்ளது. கிரணத்தின் சூதக்காலம் 9 மணி நேரம் முன்னதாகவே தொடங்கும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோயில் நடை அடைப்பு: இன்று சந்திர கிரகணம் நிகழ்வையொட்டி, தமிழகத்தில் உள்ள பல கோயில் நடை அடைக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 4.55 வரை ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நடை இன்று மாலை 6 மணிக்கு அடைக்கப்பட உள்ள நிலையில், 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல் தரிசனம் 29ஆம் தேதி காலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் இன்று இரவு 7.05-க்கு கோயில் மூடப்பட்டு, நாளை அதிகாலை 3.15-க்கு கோயில் கதவுகள் திறக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு கெடுபிடி.. சுங்கத்துறையினரின் கட்டுப்பாடுகளால் பயணிகள் அதிருப்தி!