சென்னை: குரங்கு அம்மை நோயினைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இந்த நோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. எனவே இந்த நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி, “குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு வருபவர்களுக்கு முதலில் 3 நாட்கள் காய்ச்சல் , உடல்வலி இருக்கும். அதனைத் தொடர்ந்து உடலில் கொப்பளம் உருவாகும். அதில் இருந்து வரும் தண்ணீர் மூலம் வைரஸ் பரவி , நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் பரவும். எனவே அவர்கள் பயன்படுத்திய துணி உள்ளிட்ட பொருட்களை கொதிக்கும் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலும், அவர்கள் பேசும்போது வரும் எச்சில் திவளையாலும் பரவும் என்பதால், பாதுகாப்புடன் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும். சின்னம்மை நோய் வந்த பின்னர் கொப்பளங்கள் காய்ந்தால் உடலில் தழும்புகள் தெரியாது. குரங்கு அம்மை வந்தால் உடலில் தழும்புகள் தெரியும். குரங்கு அம்மை நோய் தொற்றை தடுப்பதற்கு சின்னம்மை நோய்கான தடுப்பூசியை போடலாமா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்” எனக் கூறினார்.
மேலும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியின் மைக்ரோ பயாலாஜிக்கல் துறையின் உதவி பேராசிரியர் ரத்னா பிரியா கூறுகையில், “இந்தியாவில் பெரியம்மை நோய் தொற்றை முற்றிலும் ஒழித்துவிட்டோம். சின்னம்மை நோய் தொற்று வரும் போது முதலில் காய்ச்சல், உடல்வலி, கொப்பளம் வரும்.
இந்த நோய் வந்தவர்களை நாம் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். ஆப்ரிக்கா நாடுகளில் கண்டறியப்படும் குரங்கு அம்மை நோய் தொற்றுக்கான அறிகுறிகளாக காய்ச்சல், உடம்பு வலி, உடலில் நெறிக்கட்டுதல், சிறிய கொப்பளம் போன்றவை காணப்படும். குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதன் மூலமே கண்டறிய முடியும். தமிழ்நாட்டில் தற்பொழுது உள்ள ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பாலியல் உறவு மூலமாக குரங்கம்மை வைரஸ் பரவுதா?' - அலெர்ட் செய்த WHO!