சென்னை: தொழில் நுட்பம் வளர்ந்து உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்ட இந்த சூழ்நிலையில் செல்போனை மட்டும் கையில் வைத்து கொண்டு சைபர் குற்றங்கள் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது.
OTP பெறுதல், QR Code அனுப்புதல், KYC Update என்ற பெயரில் லிங்க் அனுப்புதல் போன்ற மோசடிகளையும் தாண்டி, தற்போது நல்ல வேலையில் சம்பாதிக்கும் ஆண்களையும் மற்றும் ஓய்வு பெற்ற வயதான ஆண்களையும் குறிவைத்து ஏமாற்ற துவங்கியுள்ளனர் சைபர் கிரைம் கிரிமினல்கள் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். என்னென்ன மோசடிகள் நடந்து வருகிறது என்பதையும் சென்னை சைர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்து கொண்டு பேஸ்புக், டிண்டர், மற்றும் பல சாட் ஆப்களில் முதலில் நண்பர்களாகி ஏமாற்றுகிறார்கள். ெசென்ஜரில் பேசி வாட்சாப் எண்ணை வாங்கி, வாட்சப்-ல் பெண் குரலில் Voice Changer ஆப்களை பயன்படுத்தி மிக இனிமையாக பேசுவார்கள்.வெளிநாட்டு பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண் குரலில் பேசி, நம்ப வைத்து தான் இந்தியா வந்து முதலீடு செய்ய போவதாகவும் தெரிவிப்பார்கள்.
டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களின் வீடியோக்களை அனுப்பி இந்தியா வந்திறங்கியதாக நம்பவைப்பார்கள். பிறகு தான் கோடிக்கணக்கில் பவுண்ட்ஸ் (பிரிட்டிஷ் பணம்) கொண்டு வந்ததால் தன்னை கஸ்டம்ஸில் பிடித்து வைத்துள்ளார்கள் என்றும், தன்னை விடுவிக்க பணம் அனுப்புங்கள் என்று கூறுவார்கள்.
இதனை நம்பவைக்கும் பொருட்டு போலியான Indian Customs Certificate மற்றும் பணக் கட்டுகளை கட்டி வைத்திருப்பது போன்றோ அல்லது பணக்கட்டுகளை எண்ணுவது போன்றோ வீடியோ அனுப்புவார்கள்.
முதலில் சிறிய அளவிலான தொகையை (ரூபாய் 1 லட்சத்திற்கு) அவர்கள் தரும் வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்வார்கள். பின்னர் Customs Charge, Transition Charge, Late Fee Charge என்று பல்வேறு பெயரில் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப சொல்வார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பி ஏமாறுகிறார்கள்.
இதே போல் வெளிநாட்டு ஆண்கள் போல் பேசி Matrimony Website களில் திருமணத்திற்காக பதிவு செய்யும் பெண்களை இந்த கும்பல் ஏமாற்றுகிறது. மேலும் வெளிநாட்டிலிருந்து பேசுவது போல் பேசி பிசினஸ் செய்யலாம் என்று கூறி Animal Vaccine Oil, Oil Seeds, Powder மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யலாம் என்று கூறி பணம் பறிப்பார்கள்.
எனவே பொதுமக்கள், ஆண்களோ, பெண்களோ அல்லது நிறுவனமோ, வெளிநாட்டவர்கள் போல் சமூக வலைதளங்களிலோ, இமெயிலிலோ தொடர்பு கொண்டு பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம் விசாரித்து அறிய வேண்டும்.
அந்த நபர்களிடம் பேசும் போது அந்த வெளிநாட்டவர் பணம் அனுப்ப சொல்லி கேட்டால் உடனடியாக அவர்களது தொடர்பை துண்டித்து விடவேண்டும். பணம் எதுவும் அனுப்பகூடாது. ஒருவேளை சிறிய அளவிலான பணம் ஏதேனும் அனுப்பி விட்டால், அந்த பணம் திரும்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் எதுவும் அனுப்பகூடாது. நீங்கள் அனுப்பும் பணம் எதையும் உங்களுடன் பேசும் நபர்கள் திருப்பி தரப் போவதில்லை.
எனவே முன்பின் தெரியாமல் பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராமில் பேசுபவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது என்று பொதுமக்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.22 லட்சம் மீட்பு!