சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அந்த அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவின் தொண்டராக இருப்பதே பெருமை என்பதை எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கினார்கள். கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் தொண்டர்களால் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை, எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ, அந்தளவு சிதைத்துவிட்டார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை உச்சரிக்கக் கூட விரும்பவில்லை. அவர்கள் அந்த தகுதியை இழந்துவிட்டார்கள். தொண்டர்களுக்கு இருந்த மரியாதையை காலில் போட்டு மிதித்து விட்டார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாம் தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம். ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொண்டோம். மக்கள் தீர்ப்பு என்ற ஒன்று உள்ளது. அது வரும்போது தெரியும். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக, முதலமைச்சராக ஒரு தொண்டன் முதலமைச்சராக அமரும் வாய்ப்பை உருவாக்குவோம்.
ஈரோடு கிழக்கில் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் இவர்களின் செயல்பாடுகள் தெரியவரும். அதிமுகவின் சட்ட விதிகள்படி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியின் தீர்மானத்தை பொதுக்குழுவில் நிராகரித்து விட்டனர். பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்.
ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறோம் எனத் தெரிவித்தோம். ஆனால், ஒரு மரியாதைக்கு கூட பதில் தரவில்லை. மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என்பது போல மக்களிடம் செல்வோம். உங்களுக்கு முன்பு நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நம்பிக்கையுடன் செயல்படுவோம், வெற்றி நிச்சயம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நெல்லையில் சீமான் உருவபொம்மை எரிப்பு - ஏன் தெரியுமா?