சென்னை சேப்பாக்கத்தில் பார்வையற்றோர் மற்றும் பட்டதாரி மாணவர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் முத்துச்சாமி, " மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் நாங்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படுகிறோம். மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அமைப்பு அரசாங்கத்தில் இருந்தும் அதனால் எங்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. பார்வையற்றோருக்காக 9 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அரசே தெரிவித்தும்கூட எங்களுக்கான வேலை வாய்ப்பினை அரசாங்கம் செய்ய மறுக்கிறது.
அதிகாரிகள் எங்களை உள்ளேயே அனுமதிக்காமல் ஏளனம் செய்கின்றனர். வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சரும், அலுவலர்களும் எங்களை அழைத்துப் பேச வேண்டும்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தவறினால் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.