புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுச்சேரி மாநில குற்றவியல் வழக்கறிஞர் பரதசக்கரவர்த்தி, ”மனுதாரரின் கணவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்பட கொலை முயற்சி, வழிப்பறி என்று 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக, அவர் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தமிழரசு, ”மனுதாரர் மீது 2009 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரைதான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையும் முடியாத நிலையில், அவரைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்” என்று வாதிட்டார்.
ஆவணங்களை எல்லாம் படித்துப் பார்த்த நீதிபதிகள், ”புதுச்சேரி மாநில காவல் துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் எல்லாம் முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ளன. அந்த வழக்குகளின் புலன் விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கவில்லை.
11 ஆண்டுகளாக காவல் துறையினர் என்ன செய்கிறார்கள்? அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான். இந்தக் குற்றப் பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும்.
இந்த வழக்கில் 11 ஆண்டுகளாக ஏன் புலன் விசாரணையை முடிக்காமல் காவல் துறையினர் இழுத்தடித்து வருகின்றனர், என்பது குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட நேரிடும். எனவே, விரிவான பதில் மனுவை காவல் துறையினர் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.