தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (ஏப்.06) நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக ஆறு கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில், மூன்று கோடியே ஒன்பது லட்சத்து 23 ஆயிரத்து 651 ஆண் வாக்காளர்களும், மூன்று கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பெண் வாக்களார்களும், ஏழாயிரத்து 192 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்கள். 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்றாயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் மூன்றாயிரத்து 585 ஆண்களும், 411 பெண்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவர்களும் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.
நேற்று (ஏப்.06) காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு வாக்களித்தனர். வாக்குப்பதிவு மையங்களில் முகக் கவசம், கையுறை வழங்கப்பட்டு கரோனா வழிமுறைகளின்படி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 105 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக தெரிவிக்கப்பட்டிருந்தன. 531 பதட்டமான வாக்குச்சாவடிகள், 10 ஆயிரத்து 130 மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 118 சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 165 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாடு யூனிட்கள், விவிபேட் இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் நான்கு லட்சத்து 75 ஆயிரத்து 521 ஊழியர்கள் பணிபுரிந்தனர்.
காவல்துறை தரப்பில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 50 விழுக்காடு வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இது குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறுகையில், "தமிழ்நாட்டில் 71.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
தமிழ்நாடு முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி மூலம் கண்காணிப்பு, மையங்களில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உபயோகிக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், மத்திய சென்னை - லயோலா கல்லூரி, தென் சென்னை - அண்ணா பல்கலைக்கழகம், வடசென்னை - ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு இதுவரை வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மறுவாக்குப் பதிவு தொடர்பாக நாளை அரசியல் கட்சிகள் ஏதும் கருத்து கூறினால், அதுபற்றி ஆலோசிக்கப்படும். ஆனால், வாக்குப்பதிவின்போது, சட்டம் ஒழுங்கு நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது மறு தேர்தல் தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை" என்றார்.
மேலும், "வாக்குப்பதிவு எந்திரம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அதுபோன்று வரும் தகவல்கள் பொய். இன்று (ஏப்.07) முதல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரால் பணம் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. அறந்தாங்கி தொகுதியில் ஈவிஎம் உடைக்கப்ப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஏப்.06) வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட பணம், நகைகள் 445.81 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டோர் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் தபால் மூலம் வாக்களித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 28 ஆயிரத்து 151 பேரும், கரோனா தொற்று உடையவர்கள் 28 பேரும் தபால் வாக்கு செலுத்தி உள்ளனர். மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை காவல் துறையினர் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இன்று வாக்களிக்கவில்லை!