சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்கு எண்ணும் இடத்திற்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணி நடந்தன. அப்போது மூன்று நபர்கள், இரண்டு வாக்குப் பெட்டிகள், ஒரு விவிபேட் இயந்திரம் உள்ளிட்ட நான்கு பெட்டிகளை, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மூவரையும் சிறை பிடித்தனர்.
இது தொடர்பாக அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த காரணத்தால் அங்கு கூடியிருந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் பகுதிக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் ஒன்று தனியார் பள்ளியில் பயன்படுத்தப்பட்டதும், அது பழுதாகியிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏன் வாக்குப் பெட்டிகளை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் மாவட்ட அலுவலர் 3 நபர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மூவரில் இருவர் மாநகராட்சி ஊழியர்கள் எனவும், ஒருவர் குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது! - மு.க.ஸ்டாலின்