சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளரிடம் பேசினார். அப்போது, "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி நடைபெறும்.
தேதியில் எவ்வித மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை உள்ளிட்ட தேர்தல் ஆணைத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் துணை ராணுவப்படை ஈடுபடுத்தப்படாது.
ஏற்கனவே பாதுகாப்பில் உள்ளவர்கள் பணியைத் தொடர்வார்கள். மூன்றடுக்குப் பாதுகாப்புடன், சட்ட ஒழுங்குப் பாதுகாப்புப் பணியில் காவல் உயர் அலுவலர்கள் தலைமையில் தனிப்படை செயல்படும்.
அடையாள அட்டை வைத்திருப்பவர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற நபர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடையாது" எனத் தெரிவித்தார்.