சென்னை: கொல்கத்தாவில் உள்ள இந்திய இன்ட்ஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற மத்திய அரசின் நிதி நிறுவனத்தில், விருதுநகர் மணப்புரத்தைச் சேர்ந்த பாண்டியன் எக்ஸ்ட்ராக்ஷன் என்ற நிறுவனம் 1992ஆம் ஆண்டு 62 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது.
கடன் தொகையைச் செலுத்தாததால் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வங்கி தொடர்ந்த வழக்கில், வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலுத்த தமிழ்நாடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு முறை செட்டில்மென்ட் அடிப்படையில் 14 லட்ச ரூபாயை மட்டும் செலுத்தும் நிறுவனத்தின் முடிவை 2010ஆம் ஆண்டு ஐஐபிஐ வங்கி ஏற்றது.
நிறுவனத்தின் மனு தள்ளுபடி
வங்கியின் செட்டில்மென்ட் முடிவை மத்திய நிதி அமைச்சகத்தின் குழு ஏற்காததால், தீர்ப்பாயம் நிர்ணயித்த தொகையைத் திரும்பச் செலுத்துமாறு தனியார் நிறுவனத்திற்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிசெய்து, நிறுவனத்தின் மனுவை கடந்த டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நிறுவனம் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று (பிப்ரவரி 19) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனியார் நிறுவனத்தின் இரண்டு சொத்துகள் வங்கியிடம் இருக்கும்போதும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடனை வசூலிக்காத வங்கியின் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, செட்டில்மென்ட் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்த வங்கி அலுவலர் யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், சம்பந்தப்பட்ட அலுவலர் மீதும், தனியார் நிறுவனத்தின் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நடவடிக்கைகளில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 23ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: வாக்கு மையத்திற்குள் சுவர் ஏறி குதித்தவர்களை காவல் துறையில் ஒப்படைத்த ஆட்சியர்