சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 24) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் நடிகர் விஜய்யைக் காண வேண்டும் என காத்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விஜய் ரசிகர்கள் விஜய்யைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நேரு ஸ்டேடியத்தில் குவிந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு டிக்கெட் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் டிக்கெட் இல்லாத ஏராளமான ரசிகர்கள் வெளியிலேயே காத்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் உள்ளே நிகழ்ச்சியின்போது விஜய்யை பார்க்க அருகே சென்ற ரசிகரை, பவுன்சர் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்வ மிகுதி காரணமாக சில ரசிகர்கள் விஜய்யைப் பார்க்க அவருடைய அருகே சென்றனர். அவர்களை எச்சரித்து அனுப்பாமல் எப்படி அடிக்கலாம் எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெளியே கூட்ட நெரிசலில், கையில் டிக்கெட் இருந்தும் பல ரசிகர்கள் போலீஸிடம் அடி வாங்கினர்.
அரங்கிற்கு உள்ளேயும் பவுன்சர்கள் கையால் ரசிகர்கள் அடிவாங்கினர். இதனை அங்கிருந்த படக்குழுவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம். அதற்காக இதுபோன்ற பாதுகாப்பற்ற நிகழ்ச்சிகளை நடத்தி அப்பாவி ரசிகர்களை அடிக்க வேண்டுமா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV: பைக் ஹெல்மெட்டை லாவகமாகத் திருடும் ஆசாமியின் சிசிடிவி