கேரள மாநிலம், திருப்பூணித்துறையில் அக்டோபர் 6, 1926ஆம் ஆண்டு டி.என்.கிருஷ்ணன் பிறந்தார். தனது தந்தையிடம் இசை கற்கத் தொடங்கினர். பின்னர் 1942ஆம் ஆண்டு டி.என்.கிருஷ்ணனின் குடும்பத்தினர் சென்னைக்கு குடியேறினர்.
அரியகுடி ராமானுஜ அய்யங்கார், அலதூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், எம்.டி. ராமநாதன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் கிருஷ்ணனின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், 'சங்கீத கலாநிதி', 'பத்ம பூஷண்’, 'பத்ம விபூஷண்' உள்ளிட்ட பல புகழ்பெற்ற பட்டங்களையும் விருதுகளையும் டி.என்.கிருஷ்ணன் பெற்றுள்ளார்.
சென்னை இசைக் கல்லூரியில் படிக்கும்போதே பல மாணவர்களுக்கு வயலின் கற்றுக் கொடுத்துள்ளார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் நுண்கலை பள்ளியின் முதல்வராகத் தேர்வுபெற்று பணியாற்றினர். இந்நிலையில் டி.என்.கிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(நவ-2) மாலை காலமானார். அவருக்கு கமலா என்ற மனைவியும்; விஜி என்ற மகளும்; ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.
கிருஷ்ணனின் மறைவுக்கு அவருடைய ரசிகர்கள் பலர் அவரது இசை நிகழ்ச்சியின் காணொலியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் டி.என். கிருஷ்ணன் மறைவு இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.