சென்னை : தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியினர் சார்பாக போஸ்டர், பேனர், பெயர் பலகை போன்றவற்றை வைக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை பறக்கும் படையினர் தீவிர கண்காணித்து வருகின்றனர். இந்தச்சூழ்நிலையில், சென்னையில் மட்டும் நேற்று (மார்ச்.7) காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 24 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா நகரில் உள்ள சத்தியா நகர் மெயின் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பாஜக கொடி கட்டியதால், பாஜக பிரமுகர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, காரில் நாம் தமிழர் கட்சி கொடி கட்டி வந்த ஓட்டுநர் தனசேகர் (52), அருண் குமார் (18) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொளத்தூர் கங்கா தேவி நகரில், சுவரொட்டி ஒட்டிய அமமுக கொளத்தூர் பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், ராஜமங்கலம் ஜகனாதன் நகரில் சுவரொட்டி ஒட்டிய பகுஜன் சமாஜ் கட்சியினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ’அதிக தொகுதிகள் திமுக தரும் என எதிர்பார்த்தோம்; பரவாயில்லை’