சென்னை: பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டம், அக்கட்சித் தலைமை அலுவலகமான சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது.
அப்போது, பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயற்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:
தீர்மானங்கள்
- ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் 'ஜெய்ஹிந்த்' எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரனைக் கண்டித்து தீர்மானம்
- ஒன்றிய அரசின் மக்கள் நலத் திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காகத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார், நடிகர் சூர்யா. அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம்
- நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும், ஸ்டாலின் அரசைக் கண்டித்து தீர்மானம்
- கோயில் நிலங்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- கரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு மனப்பூர்வமாக பாராட்டுகள்
- நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் உடனடியாகத் திறக்க வேண்டும்
- திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், குடும்பத் தலைவிகளுக்குகு மாத ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம்,'நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.
இந்து அறநிலையத்துறை நிலங்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோயில்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பொய்களைப் பரப்பும் நடிகர் சூர்யா
நீட் தேர்வு வந்த பின்னர் 400-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு குறித்து சூர்யா பொய்களை பரப்பி வருகிறார்' என்றார்.
பாஜக மாநிலச் செயலாளர் கரு.நகராஜன், 'அதிமுகவுடனான உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது உட்கட்சி பிரச்னை' எனச் சுருக்கமாகப் பேசிமுடித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக விளம்பரம் தேடும் பாஜக- உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு