நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகமான அம்மா அன்பு மாளிகையில் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அப்போது, அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், கே. பாண்டியராஜன், பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபீல், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றிய அனைத்துப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரின் உழைப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு வரலாற்று வெற்றி.
திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்ததால் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. ஆனால் இப்போது மக்கள் உண்மை நிலையை புரிந்துகொண்டனர். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி.
மேலும், 2021ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றி மீண்டும் தொடரும். தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பது இந்த வெற்றியின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால் அந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு முன் அதன் உண்மை தன்மை என்ன என்பதை அரசு ஆராயும்" என்றார்.