சென்னை: விசாரணைக் கைதி விக்னேஷ் காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் விக்னேஷின் சகோதரர் வினோத் ஜாதி சான்றிதழ் கொண்டு வர சிபிசிஐடி அலுவலகத்தின் சார்பில் நேற்று முன்தினம் (மே.9) சம்மன் அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று (மே.10) ஆஜரான விக்னேஷின் சகோதரரை மதியம் 3 மணி முதல் டிஎஸ்பி யின் அறையில் அமர வைத்து சுமார் நான்கு மணி நேரமாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் ஜாதி சான்றிதழ் இல்லை என்றும், வினோத்தின் ஜாதி சான்றிதழ் பெற உள்ளதாக எழுதி கொடுத்து விட்டு செல்லும்படி கூறி உள்ளனர்.
மேலும் இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினர் தரப்பிலேயே வருவாய்த்துறையிடம் ஜாதி சான்றிதழ் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட நபர்களை வாங்க சொல்வதாக புகார் எழுந்துள்ளது. வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 25 நாட்களாக விசாரணை பொறுமையாக செல்வதாக தெரிவித்துள்ளனர்.