சென்னை: புழல் சிறைத் துறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ராஜேஷ் என்பவர், புழல் மத்தியச் சிறையின் இரண்டாவது விஜிலென்ஸ் பிரிவில், தலைமைக் காவலராக 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புழல் சிறையில் இருக்கக்கூடிய கேண்டீனில் மாதந்தோறும் சுமார் 25 ஆயிரம் ரூபாய், ஜிபே மூலம் லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்புகாரின் அடிப்படையில், சிறைத் துறை அதிகாரிகள் விசாரணையின் போது, தலைமைக் காவலர் ராஜேஷ் வங்கிக் கணக்கை சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர், கேண்டீனில் இருந்து ஜிபே மூலம் பணம் பெற்றதும், மேலும் சில கைதிகளின் உறவினர்கள் அவருக்கு பணம் அனுப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில், புழல் சிறை 2-ல் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த தலைமைக் காவலர் ராஜேஷ், சிறை 1-க்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புழல் சிறையில் உள்ள கேண்டீனில் டீ 50 ரூபாய்க்கும், பிரியாணி 700 ரூபாய்க்கும், பீடிக் கட்டு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் குவிந்துவரும் நிலையில், புழல் சிறை விஜிலென்ஸ் தலைமைக் காவலர், சிறை கேண்டீனில் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! என்ன நடந்தது?