சென்னை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டாலோ அல்லது வாங்கினாலோ பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருவது வழக்கம். குறிப்பாக, லஞ்சம் வாங்குவதாக அதிகாரிகள் மீது புகார் அளிக்கும்போது அவர்கள் கேட்கும் லஞ்சப் பணத்தில் ரசாயனத்தை தடவி அந்த லஞ்சப் பணத்தை கொடுக்குமாறு கூறி அதிகாரிகளை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் லஞ்சப் பணம் பெறுவதால், லஞ்சம் வாங்குவதை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் லஞ்சம் பெற்றதாக நிரூபிப்பதும் சிக்கலாக இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் ஒப்பிட்டு பார்க்கும்போது 2019ஆம் ஆண்டு 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 16 பொறி வைத்து கைது நடவடிக்கைகளும், 2020ஆம் ஆண்டில் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பொறிவைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 2021ஆம் ஆண்டு 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 16 வழக்குகள் பொறி வைத்து அதிகாரிகளை பிடித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் கூட 39 வழக்குகளும், 6 பொறி வைப்பு வழக்குகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 4 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு மே மாதம் வரையில் சென்னையில் மட்டும் 11 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மார்ச் மாதம் பல்லாவரத்தில் சார்பதிவாளர் கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்கப்பட்டார். டிஜிட்டல் மயமாக லஞ்சம் மாறியதால் மிகவும் குறைவான அளவிலேயே பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர், தேனி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. வடக்குப் பகுதியை பொறுத்தவரையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிகவும் குறைந்த அளவில் வெறும் எட்டு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மத்திய மண்டலத்தைப் பொறுத்தவரையில் திருச்சியில் மட்டுமே ஏழு வழக்குகள் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 100 முதல் 120 வரை குறி வைத்து அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக தமிழ்நாட்டில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, குறைவான அளவிலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லஞ்சம் வாங்கப்படுவது டிஜிட்டல் மயமாக மாறி இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, செல்போன் டவர் லொகேஷன்களை அடிப்படையாக வைத்தும் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை கண்டுபிடித்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பினாமி பெயர்களில் பணம் வாங்கப்படுகிறதா என்று விசாரணை நடத்திய வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் டிஜிட்டல் மயமாக லஞ்சம் மாறியதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய சூழலில் இருப்பதாகவும், அதிலும் சில நேரங்களில் லஞ்சம் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் கூட்டாக செயல்படுவதால் கண்டுபிடிக்க முடியாத சூழலில் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.