சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
எட்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் அண்ணல் காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்று கண்காட்சியைச் சிறப்பித்து வருகின்றன.
பல அரிய புகைப்படங்கள்
ஏறத்தாழ இருபது முறை தமிழ்நாட்டிற்கு வருகைதந்து தமிழர்களை-தமிழ்நாட்டை- தமிழ்மொழியை நேசித்த அண்ணல் காந்தியடிகளுக்கு விடுதலைப் போராட்ட வியூகங்களை வகுப்பதில் தமிழ்நாடு ஒரு முக்கிய களமாக விளங்கியதை வரலாறு போற்றிக் கொண்டுள்ளது.
சீரிய அவ்வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை எடுத்துக்கூறும் அரிய புகைப்படங்கள், இந்திய விடுதலைப் போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட தலைவர்கள் புகைப்படங்கள், உப்பு சத்தியாகிரகப் போராட்டம், சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த புகைப்படங்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றும் மக்களால் இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் எனப் பலவும் இதில் இடம்பெற்றுள்ளன.
இவைமட்டுமல்லாமல், செய்தி மக்கள் தொடர்புத்துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் உருவம் பொறித்த பழைய நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் பட்டயங்கள் ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன.
கட்டபொம்மன் தூக்கிலிட்ட ஆவணம்
மேலும், பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) புத்தக நிலையம், முத்தையா ஆராய்ச்சி நூலகம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புகளும், தட்சிண சித்ரா குழுவினரால் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்டம் பற்றிய அருமையான பழைய மண் பொம்மைகள், மரத்தாலான ராட்டை போன்றவைகள் கண்காட்சியை மேலும் சிறப்பாக்கியுள்ளன.
தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் கட்டபொம்மன் தூக்கிலிட்டது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பானர்மேன் கொடுத்த அறிக்கை, மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட விசாரணை ஆவணங்கள், ஆஷ்துரை கொலை வழக்கு பற்றிய ஆவணம், நீல் சிலை உடைப்பு குறித்த ஆவணம், வ.உ.சி. வழக்கு (திருநெல்வேலி சதி வழக்கு) ஆவணங்கள், செஞ்சிக் கோட்டை மற்றும் இதர கோட்டையின் நிலவரைகள், வேலூர் சிப்பாய்க் கலகம் பற்றிய வரலாற்று ஆவணங்கள் குறித்த புகைப்படங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்லூரி மாணவர் சண்முகவடிவேல், "இந்திய விடுதலைக்காக தலைவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், தியாகங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிபடுத்தியுள்ளன. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழங்கால நாணயங்கள், விடுதலை போராட்டம் குறித்து செய்தித்தாளில் வெளிவந்த புகைப்படங்கள், பாரதியார் வரைந்த ஓவியங்கள் அற்புதாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
13 வயதிலேயே சிறை தண்டனை பெற்ற பெண்கள்
கண்காட்சியைப் பார்க்க வந்த கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், "இதுவரை இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஆண்கள் போராடினர் என்பது குறித்த வரலாறு பிரபலமாகத் தெரிந்தது. போராட்டத்தில் பெண்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்று இங்கு வந்து தெரிந்து கொண்டேன்.
சுதந்திரத்திற்காக 13 வயதிலேயே சிறைத் தண்டனை பெற்ற வீர பெண்களும் இருக்கின்றனர். சுதந்திரத்தின்போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தகவல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்கள் எழுதிய புத்தகங்கள், ஆங்கிலேயர்கள் தடை செய்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
காந்திஜி பயன்படுத்திய குடை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமர்ந்த சாய் நாற்காலி, வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் மற்றும் கத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய புகைப்படங்கள், தொகுப்புகள் மூலம் பலவற்றை கற்றுக்கொள்ள முடிகிறது. பெண்கள் சுதந்திரத்தின்போது மேற்கொண்ட சாதனைகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது" என்றார்.
வேலு நாச்சியார் வரலாறு
பழைய நாணயங்கள், அஞ்சல் தலை சேகரிப்பவர் மணிகண்டன் பேசுகையில், "ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை ஆட்சி செய்த வேலு நாச்சியார் காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள், சசிவர்ணன் பயன்படுத்திய தமிழ் நாணயங்கள், மருதநாயகம் ஆட்சி காலத்தில் வெளிவந்த நாணயங்கள், பாளையக்காரர்கள் கோபால் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஐந்து ரூபாய், பத்து ரூபாய், 50 ரூபாய், நூறு ரூபாய் நாணயங்களும் வைக்கப்பட்டுள்ளன" என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 250 ஆண்டு வரலாற்று சம்பவங்கள் குறித்த 'விடுதலை போரில் தமிழகம்' கண்காட்சி தொடக்கம்!