சென்னை: உச்ச நீதிமன்ற கொலிஜியம் மாவட்ட நீதிபதிகளான பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 பேரையும், வெங்கடாச்சாரி லஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த ஜனவரி 17ஆம் தேதி பரிந்துரை செய்தது.
இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கெளரி உட்பட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று (பிப்.7) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதே நேரத்தில், விக்டோரியா கெளரியின் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலீஜியத்தின் முடிவில் தலையிட முடியாது எனவும்; அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர்தான் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும்; அரசியல் பின்புலத்தில் இருந்து வருபவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவர் நியமனத்தை ரத்து செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நீதிபதியாக நியமிப்பதில் என்ன சிக்கல்? என்றும்; அதற்கு ஏதும் வரையறை உள்ளதா? எனவும்; விக்டோரியா கெளரியின் நியமனத்தை வழக்கறிஞர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் விளக்கத்தைக் கேட்கலாம்.
![மூத்த வழக்கறிஞர் அருள்மொழி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-victoriagowriappointed-script-7204624_07022023131436_0702f_1675755876_967.jpeg)
இது குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அருள்மொழி கூறும்போது, "நீதிபதியாக பதவியேற்கும் எவரும், இந்திய அரசியலமைப்பை ஏற்க வேண்டும், ஏற்காதவர்கள் பதவி ஏற்கக் கூடாது. உச்ச நீதிமன்ற கருத்தின்படி சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து பேசியவர்கள், பதவி ஏற்புக்கு பிறகு கருத்து தெரிவிக்கமாட்டார்கள் என்பதை ஏற்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ் இயக்க கொள்கைகளை கொண்டவர்கள், தீவிரமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஆதரிப்பவர்களாகவே இருப்பார்கள். உயர் நீதின்ற நீதிபதி சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் குறித்து தனிப்பட்ட கருத்துகளை தீர்ப்புகளில் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதித்துறையின் பரிணாமம் மட்டுமே, அதை கேள்வி கேட்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது" எனத் தெரிவித்தார்.
![ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-victoriagowriappointed-script-7204624_07022023131436_0702f_1675755876_71.jpeg)
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறும்போது, "எது அவதூறான பேச்சு என்பதற்கான வரையறை சட்டத்தில் இல்லை. நீதிபதிக்காக பரிந்துரை செய்யப்பட்ட ஹமீது மற்றும் ஜோசப் ஆகியோர் பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீவிரமாக கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பவர், நீதிபதியான பின்னர் நேர்மையானவராக செயல்பட்டார்.
திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த பின்னர் நீதிபதியான ரத்னவேல் பாண்டியன், கட்சிக்கு ஆதரவாக எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை. இன்றைய வழக்கறிஞர்களில் 99 சதவிகிதம் பேர் ஏதாவது ஓர் அரசியல் அமைப்பை ஆதரித்துதான் செயல்படுகின்றனர். அவர்கள் நீதிபதிகளாக ஆன பின்னர் செயல்பாடு எப்படி உள்ளது என்பதைத் தான் கவனிக்க வேண்டும்" என்று கூறினார்.
![பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-victoriagowriappointed-script-7204624_07022023131436_0702f_1675755876_676.jpeg)
பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம் கூறுகையில், "நீதிபதிகள் நியமனமானது கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தை வைத்து தீர்மானிக்கப்பட்டது. அதனால், நீதிபதி விக்டோரியா கெளரி சிறுபான்மையினரை விமர்சனம் செய்தார் என்பதற்காக அவரை எதிர்க்கக் கூடாது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த சிடி செல்வம், சந்துரு, ஹரி பரிந்தாமன் ஆகியோர் அரசியல் அமைப்பை ஆதரித்தவர்களாக இருந்தாலும், நீதிபதிகளான பின்னர் எந்த அமைப்புக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால், அரசியல் பின்புலம் உள்ள யாரும் நீதிபதியாக வரக்கூடாது என தீர்மானிக்க முடியாது" என்று கூறினார்.
இவர்களது கருத்துப்படி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட விக்டோரியா கெளரி, ஓராண்டுக்கு எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே, அவர் சிறுபான்மையினருக்கு எதிரானவரா? என்பதைக் கணிக்க முடியும்.
இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி பதவியேற்பு!