சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. அதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98ஆவது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணுவுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "பொதுவுடைமை இயக்கத்தின் சிற்பி நல்லக்கண்ணுவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர் விருது' நல்லக்கண்ணுவுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது. கொள்கை, லட்சியத்திற்கு இலக்கணமாக தள்ளாத வயதிலும் தொடர்ந்து செயல்படுபவர் நல்லக்கண்ணு. பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் எடுத்துள்ள முயற்சிக்கு நல்லக்கண்ணு வழிகாட்டியாக திகழ்கிறார்" என்று கூறினார்.
பின்னர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, "தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 29ஆம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. மழை, புயல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் எது வந்தாலும் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும்.
இந்தப் போராட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைக்க உள்ளார். நல்லக்கண்ணு தனது 98ஆவது வயதில் தொடங்கி வைக்கும் முதல் போராட்டமாக இப்போராட்டம் அமைய உள்ளது" என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், " தியாகம் மற்றும் தன்னலமற்ற வீரம் கொண்ட தலைவர் நல்லக்கண்ணு. எந்த அடக்குமுறைக்கும் அவர் அஞ்சியதில்லை. இத்தகைய தீரம் மிக்க செயல்களால் தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அவருக்கு அளித்துள்ளது. அவர் போல தியாகம் உள்ளம் படைத்தவர்களை வரலாற்றில் காண்பது அரிது. பயங்கரவாத சனாதன சக்திகளை முறியடிக்க நல்லக்கண்ணுவின் வழிகாட்டுதல் தேவை" என்று கூறினார்.
பின்னர் மேடையில் பேசிய நல்லக்கண்ணு, "என்னை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சுதந்திரத்தை பாதுகாக்க சமத்துவம், சகோதரத்துவம் இருக்க வேண்டும். இவைகள் இல்லை என்றால் சுதந்திரத்தைப் பாதுகாக்க இயலாது என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பேணிக்காத்து, சுதந்திரத்தை பாதுகாப்பது நமது கடமை. மத்திய அரசின் மதவெறி சக்திகளை முறியடித்து மதச் சார்பற்ற கட்சிகள் வெற்றிபெற நாம் போராட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.