சென்னை: இந்தியாவின் முதல் காவல் துறை, 1856-ல் அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் தான் உருவாக்கப்பட்டது. இந்திய காவல் துறையின் முன்னோடி எனப்பெயர் பெற்ற தமிழ்நாடு காவல் துறையில், முதல் கைரேகைப் பிரிவு, தடய அறிவியல் பிரிவு, வயர்லெஸ் அமைப்பு, கடலோரக் காவல் படை என்று பல பிரிவுகள் என முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமையும் உள்ளது.
இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட தமிழ்நாடு காவல் துறைக்கு குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடியை வழங்கவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை விடுத்ததை அடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசு, 2009-ல் அதற்கான ஆணை தமிழ்நாடு காவல் துறையின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி பிறப்பிக்கப்பட்டது.
சிறப்பு அங்கீகாரம்: ஆனால், சில நிர்வாக காரணங்களால் வழங்க முடியாமல் போக, 13 ஆண்டுகளுக்குப்பிறகு அணிவகுப்பு நடத்தி தற்போது வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்புக்கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில காவல் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், உள்துறைச்செயலாளர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடியில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்துடன் வாய்மையே வெல்லும் என்று பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் சின்னத்தைப் பொருத்தி இந்த சிறப்புப் பட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னம் பொறித்தப் பட்டையை காவலர் முதல் டிஜிபி வரை அனைவரும் தங்கள் சீருடையின் வலது தோள்பட்டையில் அணிந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறைக்கு அறிவிக்கப்பட்ட குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி அந்தஸ்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கும் பிரமாண்ட விழாவானது சென்னையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் வரும் 31ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சொத்து வரி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப்பு - எடப்பாடி பழனிசாமி