புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, திருச்சி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய கடந்த 4 மாத காலங்களாக சிபிசிஐடி காவல்துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக வேங்கைவயல், இறையூர், காவேரி நகர், கீழ முத்துக்காடு, மேல முத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 147 பேரிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அதில் 11 நபர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக இரத்த மாதிரி சேகரிக்க நீதிமன்றத்தின் ஆணையை பெற்றுள்ளனர்.
இதனிடையே அந்த 11 நபர்களில் முதல் நபரான காவல்துறையில் பணியாற்றும் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த முரளி ராஜா மற்றும் 9-வது நபரான கண்ணதாசன் ஆகிய இருவருக்கும் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இருவரும் இன்று காலை 11 மணிக்கு சென்னை தடயவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனைக்காக ஆஜராக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டதற்கு முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வாட்ஸ்அப் குரூப் உருவாக்கியுள்ளனர்.
அந்த குரூப்பில் காவலர் முரளிராஜா, கண்ணதாசன் உள்ளிட்டோர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை குரலாக பதிவிட்டிருந்ததாகவும், அந்த குரல் பதிவு சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதன் உண்மை தன்மை குறித்து உறுதி செய்ய தற்போது இருவரிடமும் தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்; காவலர் உட்பட 11 பேரிடம் மரபனு சோதனை நடத்த அனுமதி! திடுக்கிடும் தகவல்கள்