சென்னை: தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிந்தனைச் செல்வன், 'தஞ்சாவூரில் நடந்த சிறுமி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் நிலையில், சொந்தக் கருத்துகள் ஏராளமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவை பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்குகின்றன. ஆகவே, இவற்றை முறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக பேரவையில் முன்வைக்கப்பட்டது.
அதிமுக உறுப்பினர்கள் பலர் தாலிக்குத் தங்கம் திட்டம் அரசியல் காரணமாக திரும்பப் பெறப்பட்டது எனக் கூறிய நிலையில், அது பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
என்னை போன்று முதன்முறையாக சட்டப்பேரவைக்கு வருபவர்களுக்கு கடுமையான இடநெருக்கடி உள்ளதைப் பார்க்கிறோம். இதனால், முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டடப்பட்ட ஓமந்தூரார் தோட்ட கட்டடத்தில், சட்டப்பேரவைக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று விசிக சார்பில் கோரிக்கை வைக்கிறேன்’ என்று பேசினார்.
மேலும் அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிடப்பட்ட அந்த கட்டடத்தை மீண்டும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்