சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டவர்கள் 4-ஆவது நாளாகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இவர்கள். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி பெற்றவர்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களது கோரிக்கை நியாயமானது, ஜனநாயகப்பூர்வமானது.
இவர்கள் தொடர்ந்து பத்தாண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், தெருவில் நிற்கின்ற நிலையில் உள்ளனர். அரசாணை 149-ஆல் 2013-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் யாரும் பணிக்குச் சேர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு வேலைவாய்ப்பு என்னும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் 177-வது பிரிவில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிற உறுதி அளிக்கப்பட்டிருப்பதைப் போராடும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையிலே இந்த கோரிக்கையில் எவ்வித முரண்பாடும் இல்லை. கொள்கை அளவிலே உடன்பாடு கொண்ட நிலையில் தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, முதல்வர் இந்த கோரிக்கைக்கு எதிராக இருக்க வாய்ப்பில்லை, அதை மறுக்கவும் வாய்ப்பில்லை. எப்படியும் இதை நிறைவேற்றுவார் என்கின்ற எதிர்பார்ப்போடு ஆசிரியர்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 4 நாள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தினால் ஆண்கள், பெண்கள் என சிலர் மயக்கமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கவலைக்கிடமாக உள்ளது. எனவே, தமிழக முதல்வர் அரசாணை 149-இல் இருந்து விளக்கு அளித்து சிறப்பு அரசாணை பிறப்பித்து இவர்களை நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். முதல்வர் தீவிரமாக இதை கருத்தில் கொண்டு இவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசு இவர்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசீலிக்க வேண்டும். ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும், அதை விசிக வேண்டுகோளாக வைக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஆதரவாக பாஜக சார்பில் வரும் 15ஆம் தேதி போராட்டம் - அண்ணாமலை எச்சரிக்கை