விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அசோக் நகரில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடைபெறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், 'திருவள்ளுவர் எந்த மதம், சாதிக்கும் உரியவர் அல்ல. இதில் பாஜக மதச்சாயம் பூச பார்ப்பதை விசிக கண்டிக்கிறது. திருவள்ளுவரை அவமதிப்பவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வள்ளுவர் படம் இருக்கும். தற்போது வள்ளுவருக்கு பதில் சாமி படங்கள் இருப்பதற்கு, தமிழ்நாடு அரசு தான் பொறுப்பு' என்றார்.
ரஜினி காந்த் குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருமா, 'ரஜினி காந்த் என் மீது காவிச் சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்ற கருத்தை விசிக சார்பில் நான் வரவேற்கிறேன். அவரின் துணிச்சலை வரவேற்கிறேன்.
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாழ்த்துகள். ஆனால், அதன் மூலம் பயன் இருக்குமா என்பதை அவர் வந்த பிறகு தான் தெரிவிக்க முடியும். திமுக - விசிக கூட்டணிக்கு இடையே விரிசல் என்ற செய்தி வதந்தி. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்பு, எவ்வளவு இடங்கள் வாங்கப்படும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்
இதனிடையே, வருகின்ற 11 ஆம் தேதி வள்ளுவர் சிலை அவமதிப்பு செய்தவரைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் நடக்கும் ஆர்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்’ எனத் தெரிவித்தார்.