சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. ஒரே நாளில் வெளியாகியுள்ளதால் பல இடங்களில் இருதரப்பு ரசிகர்கள் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று (ஜன 10) மாலை முதலே திரண்ட ரசிகர்கள் கூட்டத்தால், அந்த பகுதி முழுவதும் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்தது. பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில், டிக்கெட் எடுக்காத பலரும் உள்ளே நுழைந்ததால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தாலும், அதையும் மீறி ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் திரையரங்கின் கண்ணாடி சேதம் அடைந்தது. கற்களை வீசி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் துணிவு படம் ஒரு மணிநேரம் தாமதமாக திரையிடப்பட்டது. டிக்கெட் இல்லாமல் கொண்டாட மட்டுமே ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் ரோகிணி திரையரங்கு வளாகமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். சாலை முழுவதும் ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதில், துணிவு படத்தின் பேனரை விஜய் ரசிகர்களும், வாரிசு படத்தின் பேனரை அஜித் ரசிகர்களும் கிழித்து எறிந்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படம் வெளியிடப்பட்டதால் இருதரப்பு ரசிகர்களும் கூடும் சூழல் உருவாகியது தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மளிகை வியாபாரியை தாக்கிய மர்ம கும்பல்; போராட்டம் நடத்துவதாக வணிகர் சங்கம் எச்சரிக்கை