சென்னை: கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு தினத்தை இரவு நேரங்களில் கொண்டாட அரசு தடை விதித்திருந்தது. இந்தாண்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாட அரசும், காவல் துறையும் அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கேளிக்கை விடுதிகள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றன. சென்னையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த அனைத்து கேளிக்கை விடுதிகளும் நாளை (டிச.31) இரவு நியூ இயர் பார்ட்டி ( New Year Party) என்ற தலைப்பில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து டிக்கெட் விற்பனையில் இறங்கியுள்ளது.
அந்தந்த கேளிக்கை விடுதிக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். குறைந்தபட்சமாக சிறிய கேளிக்கை விடுதியில் ஒரு டிக்கெட் விலை ரூ.1,500 முதல் தொடங்குகிறது. பெரிய விடுதியில் 1 ஆண் - ரூ.4,000 , 1 பெண் - ரூ.3500, ஒரு ஜோடிக்கு - ரூ.8000 என டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி விஐபி டிக்கெட் என்று, தனியாக கிட்டத்தட்ட 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட் விலைக்கு ஏற்றார்போல் கேளிக்கை விடுதிக்குள், நாளை இரவு அளவில்லாத மதுபானமும், உணவும் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக தனியார் கேளிக்கை விடுதியின் மேலாளரிடம் பேசுகையில், “31ஆம் தேதி இரவு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம். அதுமட்டுமின்றி காவல் துறை சார்பில் அனைத்து கேளிக்கை விடுதி உரிமையாளர்களையும் அழைத்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்தார்கள். எங்கள் சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுத்து இருக்கிறோம்.
டிக்கெட் விலைக்கு ஏற்ற வகையில் அளவில்லா மதுபானம் மற்றும் உணவு வழங்க இருக்கிறோம். அதுமட்டுமின்றி நடனம் ஆடுவதற்கான தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி இருக்கிறோம். 8 மணிக்கு தொடங்கி 12:15 அல்லது 12:30 மணி அளவில் DJவை அணைத்து விடுவோம்.
பெண்கள் பாதுகாப்புக்கும் மற்றும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பவுன்சர்களை நியமிக்க உள்ளோம். அதுமட்டுமின்றி அனைத்து வாடிக்கையாளர்களும் கொண்டாட்டத்துக்கு பிறகு பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்றடைய எங்கள் விடுதி சார்பாக ஓட்டுநர்களை நியமிக்க இருக்கிறோம். எனவே பாதுகாப்பான கொண்டாட்டமாக இருக்கும் " என தெரிவித்தார்.
இது ஒரு பக்கம் தற்போது சென்னை கேட்டட் கம்யூனிட்டி ( Gated community) அதிகமாக வளர்ந்து வருகிறது. இவர்களும் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர் அதை ஹவுஸ் பார்ட்டி ( House party) என்று அழைக்கின்றனர். குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நபர்கள் மட்டும் கொண்டாடும் வகையில் இதை நடத்துவார்கள். வெளி நபர்களை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த பார்ட்டி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது தொடர்பாக அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் DJவிடம் கேட்கையில், “9 அல்லது 10 மணியளவில் கொண்டாட்டம் தொடங்கப்படும். அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சூழலில் இருக்கும் நபர்களை மட்டுமே அனுமதித்தார்கள். கொண்டாடுவதற்காக தனியாக அங்கே அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்வார்கள். இதற்காக குறிப்பிட்ட அளவு ரூபாயை அந்த குடியிருப்பு வாசிகளுடன், அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் வசூலிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: நியூ இயர் பார்ட்டிக்கு பிளானா? முதலில் இதை படிங்க!