சென்னை: இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மற்றும் பழமை வாய்ந்த உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த பூங்கா அறிவியல் மேலாண்மை நடைமுறைகளுக்கு பெயர் பெற்றது. சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால்நடை மற்றும் அமைச்சகத்தால் மிகப்பெரிய மிருக காட்சி சாலை என மதிப்பிடப்பட்டுள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1977 வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வண்டலூர் உயிரியல் பூங்காவனது மத்திய உயிரியல் பூங்கா ஆணையகத்தால் சிறந்த உயிரியல் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் இந்த பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உட்பட தமிழகத்தில் உள்ள 4 உயிரியல் பூங்காவிற்கு தமிழக அரசு கடந்த நான்காம் தேதி அதிரடியாக நுழைவு கட்டணங்களை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (செப்.9) முதல் புதிய நுழைவு கட்டணம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைமுறைக்கு வந்தது.
பூங்காவில் முன்பு வசூலிக்கப்பட்ட கட்டணம், தனி நபர் பெரியவர்களுக்கு 90 ரூபாய் செல்போன் கொண்டு வந்தால் 25 ரூபாய் மொத்தம் என 115 ரூபாயாக இருந்தது. தற்போது அந்த கட்டணம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி, 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணமில்லை. சக்கர நாற்காலிக்கு கட்டணமில்லை, ஹேண்டி கேமரா 350 ரூபாய், கேமரா 750 ரூபாய், சிங்கம் மான் உலாவிட வாகனம் 150 ரூபாய், அரசு பள்ளி மாணவர்களுக்கும் உடன் வரும் ஆசிரியர்களுக்கும் 20 ரூபாய் என கட்டணம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.இதைத் தவிர மேலும் வாகன நிறுத்தமிடங்களுக்கு கட்டணம் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கட்டண உயர்வு குறித்து பூங்கா உதவி இயக்குநர் மணிகண்ட பிரபு நம்மிடம் கூறுகையில், "உணவு, ஊதியம், பராமரிப்பு ஆகியவற்றிற்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லை, சக்கர நாற்காலிக்கு முன்பு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது தற்போது புதிய கட்டணத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, பாலூட்டும் அறை ஆகியவை கட்டணமில்லை" என தெரிவித்தார்.
பொதுமக்கள் அவதி: உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் கட்டணம் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும் இது நடுத்தர குடும்ப மக்களை பாதிக்கும் எனவும் குடும்பத்தில் ஐந்து பேர் வந்தால் ஆயிரம் ரூபாய் செலவாகிறது இதை நாங்கள் வெளியில் ஷாப்பிங் செய்து கொள்வோம் எனவும் புலம்பி செல்கின்றனர்.
பராமரிப்பு அற்ற நிலையில் பூங்கா: இது குறித்து திருச்சியில் இருந்து வந்த பெண்மணி ஜூலி கூறுகையில், "சென்றமுறை நாங்கள் பூங்காவுக்கு வந்தபோது 50 ரூபாய் மட்டுமே நுழைவு கட்டணமாக இருந்தது தற்போது 200 ரூபாய் வசூலிக்கின்றனர் இது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு அதிகமான கட்டணம் இருந்தால் ஏழை எளிய மக்கள் எப்படி பூங்காவிற்கு வருவார்கள் இன்று காலை கூட பூங்காவிற்கு வந்த சிலர் கட்டணம் அதிகமாக இருப்பதால் திரும்பி சென்று விட்டனர்.
மேலும் கார்களை நிறுத்துவதற்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர் வெளியிலிருந்து உணவு வாங்கி வந்தால் அதற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வளவு கட்டணம் வாங்குகிறார்கள் ஆனால் உள்ளே இருக்கும் கழிவறைகள் சுத்தமாகவே இல்லை. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 200 கட்டணம் என்னை பொறுத்தவரை ஒர்த்தே கிடையாது.
குடும்பத்துடன் வந்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது இதற்கு நாங்கள் மால்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம். இவ்வளவு பணம் கொடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்கணுமா என்று மக்களை யோசனை செய்யும் அளவிற்கு இந்த கட்டணம் உள்ளது. எனவே தமிழக அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும்” கோரிக்கை வைத்தார்.
சுற்றுலா பயணி வேதனை: மதுரையில் இருந்து பூங்காவிற்கு வந்த இசக்கி பாண்டி கூறுகையில், “நாங்கள் மதுரையிலிருந்து முதல்முறையாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்துள்ளோம் வந்தவுடன் நுழைவு கட்டணத்தை கேட்டவுடன் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும் கார் பார்க்கிங்க்கு 150 ரூபாய் வசுலிகின்றனர் இது மிகவும் அதிகமாக உள்ளது.
50 ரூபாய் அல்லது 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழ்நாடு அரசு கண்டிப்பாக இந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்" என்றார்
சேலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், "வண்டலூர் உயிரியல் பூங்காவில் கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குடும்பத்தோடு குழந்தைகளோடு வருபவர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த கட்டண உயர்வை பார்த்து பலர் திரும்பி சென்றனர் தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் நலனை கருதி வண்டலூர் உயிரியல் பூங்காவின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்றார்.
மேலும் வெளியூர்களில் இருந்து சென்னை வரும் மக்கள் தங்கள் பொழுது போக்கிற்காக பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்றவற்றைகளை அதிகம் சென்று பார்வையிடுகின்றனர்,இதுபோன்ற அதிகப்படியான கட்டண உயர்வால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையும், எனவே ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.