சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் இல்லத்தில் நேற்று(ஜூலை 3) அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவைச் சார்ந்த வைத்திலிங்கம், "தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து தான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், நடந்த பொதுக்குழு சட்ட ரீதியாகவும் நடக்கவில்லை. அதில் ஒருங்கிணைப்பாளர் முன்மொழியவும் இல்லை, வழிமொழியவும் இல்லை. அன்றைக்கு நடந்தது பொதுக்குழுவே இல்லை, நாடகம்.
இன்று (ஜூலை.4) வரக்கூடிய அவமதிப்பு வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அதைச் சந்திக்கத் தயார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்காது. உச்ச நீதிமன்றத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்றுள்ளனர். அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்" எனக் கூறினார்.
அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்குமா? அல்லது மறுக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி மறுக்கும்பட்சத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த பரிசீலனை?!