சென்னை: 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி வைகோவை கட்சியிலிருந்து நீக்குவதாகத் திமுக செயற்குழு முடிவெடுத்தது. அடுத்த நாளே, "நாங்கள்தான் உண்மையான திமுக. கறுப்பு சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும், அண்ணா அறிவாலயமும் எங்களுக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாடினார் வைகோ.
கருணாநிதியின் வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சியைவிட்டே வெளியேறியவர் வைகோ அவருக்கு தற்பொழுது 77 வயதாகிறது. இருப்பினும், இயக்கத்தை புத்துயிரோடு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இப்போது அவருக்கு எழுந்து உள்ளது. இதனையடுத்து மதிமுக கட்சியின் வைகோவின் மகன் துரை வைகோ தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் வைகோ உடல்நல குறைவின் காரணமாக ஓய்வில் இருந்ததால், தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வைகோவின் மகன் துரை வைகோ களத்தில் இறங்கி பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமையகமான தாயகத்தில் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைமைக் கழக செயலாளராக வைகோ மகன் துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "பொதுக்குழு நடைபெற்ற இந்த சமயத்தில் கட்சிக்கு நீர்க்குமிழியைப் போல ஒரு சிறு பூசல் தோன்றியதுபோல ஒரு காட்சி தெரிந்தது. நான் அலட்சியப்படுத்தப்பட்ட போதும் கட்சியில் இருந்து யாரையும் இழக்க விரும்பவில்லை என்றும் என் இருதயத்திற்குள் வந்தவர்கள், இதயத்தை உடைத்து ரத்தம் கொட்ட செய்துவிட்டு போவார்களே தவிர நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது என்றும் வைகோ கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தொடர்ந்து திட்டமிட்டு ஒருவருட காலமாகவே எந்த கூட்டங்களுக்கும் வராதவர்கள் மீது கழக சட்டதிட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்க முடியும் எனவும் அப்படியிருந்தும் பொறுமை காத்தேன் எனவும் கூறினார். அவர்கள் 3-க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்கு வரவில்லை. அக்டோபர் 20ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வைத்திருந்தேன். அதற்கு 4 நாட்களுக்கு முன்பு இந்த ஐந்தாறு பேர் சேர்ந்து தனியாகக் கூட்டம் நடத்தி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று முடிவு செய்தார்கள்.
அவர்கள், தேர்தலுக்கு முன்பு கட்சிக்கு எதிராகப் பேசியவர்கள், அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தெரிவித்தார்கள். திமுகவுடன் தேர்தலைச் சந்தித்து, பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
திமுகவுடன் நல்ல புரிதலுடன் ஐக்கியமாக இயங்கி வரும் இந்த சந்தர்ப்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், இவர்கள் அங்கே போயிருந்தால் அதிக இடங்கள் கிடைக்கும் எனப் பேசிப் பார்த்தார்கள். இருந்தும் இவ்வளவு காலம் நம்மோடு பயணித்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவைத்தேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: “நிதியமைச்சரிடம் பதில் இல்லை, வெளிநடப்பு செய்தோம்”- எடப்பாடி பழனிசாமி