இது தொடர்பாக வைகோ கூறியிருப்பதாவது, "கடந்த ஜூன் 20ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு அனுப்பிய கடிதத்தில் புதிய திட்ட அறிக்கையை அனுப்பியது. அதில், திட்ட மதிப்பீட்டுத் தொகை 5,912 கோடி ரூபாய் என்பதை 9,000 கோடி என்று உயர்த்தி இருக்கிறது. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு 5,252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்திய கர்நாடகம், உச்ச நீதிமன்றத்தையும் உதாசீனப்படுத்தி வருகிறது. எனவேதான் தமிழ்நாடு அரசு கர்நாடக மாநிலம் மீது 2018ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி நீதிமன்ற அவதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய இருப்பதாகவும், அதற்காக ஜூலை 19ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜக அரசு கர்நாடகா மாநிலத்திற்கு நயவஞ்சகமாக துணை போவது கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதில் கர்நாடக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தி பாலைவனமாக்கும் முயற்சி ஒருபக்கம் தமிழ்நாடு மக்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டுவரும் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போவதைத் தமிழ்நாடு மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே டெல்லியில் ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுக்கூட்டத்தில் மேகதாது அணைத் திட்டத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது, நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்" என்றார்.