வேலூரில் மக்களவைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
“இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது. தேர்தலை தடை செய்ததற்கு தேர்தல் ஆணையம் முன்வைத்த காரணங்கள் நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில் வேலூர் தொகுதியில் வருமானவரித் துறை நடத்திய சோதனை, திமுக வேட்பாளர் துரை.கதிர் ஆனந்துக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த இல்லத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று இருக்கிறது. திமுக வேட்பாளர்களை அபாண்டமாக களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு வருமான வரித்துறையை முறைகேடாக பயன்படுத்தி வருவது கண்டனத்துக்கு உரியதாகும். தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று ரூபாய் 1000, 2000, 5000 என்று அள்ளி வீசுவதைத் தடுக்க திராணியற்ற தேர்தல் ஆணையம் எடப்பாடி அரசின் காவல்துறையை ஏவி, எதிர்க்கட்சியினரை மிரட்டுவது அக்கிரமச் செயலாகும்.
ஜனநாயக நடைமுறைகளை குழிதோண்டி புதைத்து வரும் மத்திய பாஜக அரசு, அரசியல் சாசன அமைப்புகள் அத்தனையையும் சீரழித்துவிட்டது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு துறை போன்றவை மோடி அரசின் ஏவலுக்குக் கட்டுப்பட்டு கிடக்கும் நிறுவனங்கள் ஆகிவிட்டன. பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சுயேச்சையான அமைப்புகளை பயன்படுத்துவது வெட்கக்கேடானது ஆகும். மோடி அரசுக்கு அடிமை சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத் தக்க வைக்க தேர்தல் ஆணையம் கருவியாக செயல்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யாமல் இருப்பதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நோக்கம் தெளிவாகிறது. இந்தியா முழுவதிலும் எதிர்க்கட்சிகளை தேர்தல் களத்தில் முடக்குவதற்கு முனைந்துள்ள மோடி அரசின் பாசிச சர்வாதிகாரத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
மக்களின் பேராதரவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழக மக்கள் பாஜகவின் பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்க தக்க தீர்ப்பை அளிப்பார்கள்.
தமிழகத்துக்கு பச்சைத்துரோகம் இழைத்த மோடி அரசையும், அதற்குக் காவடி தூக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் தூக்கி எறிய தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..