சென்னை: வடபழனி முருகன் கோயிலில் நாளை (ஜன.23) குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "2007 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
அறுபடை கோயில்களின் புண்ணிய தீர்த்தம் நாளை குடமுழுக்கிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. அர்ச்சகர்கள், உதவியாளர்கள், நன்கொடையாளர்கள் எனக் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதிக்க முடிவெடுத்துள்ளோம்.
திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படும்.
நாளை தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 50 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. வடபழனி முருகன் கோயிலில் நாளை பக்தர்கள் அனுமதியின்றி குடமுழுக்கு நடைபெறும். தொலைக்காட்சி, இணையதளங்கள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னை மணமக்கள் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு